மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நின்றான்.
அழகு அவன்
விழிகளிலா..!
மொழி மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!
சிரிக்கக் கூடாதென உதட்டை
விரிக்காதிருந்தாலும்
விழிகளில் அது வழிந்தது.
பார்க்கக் கூடாதென விழிகளைச்
சுருக்கியிருந்தாலும்
கருமணிகள் கட்டுடைத்து
என் விழிகளோடு மோதின.
இவனோடு பேசாது போனால்
எனக்குப் பேசத் தெரிந்ததில்
என்ன பிரயோசனம்..!
"பெயர் என்ன? "
விழி விரித்து
இதழ் உடைத்து
மௌனம் கலைத்தான்.
பெயர் கூட அழகுதான்.
படமெடுக்க அனுமதிப்பானா?
அனுமதியின்றி...
அவசரமாய்...
குறை நினைப்பானா?
இப்போ...
மனத்திரையில் அவன் வந்து
மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நிற்கிறான்.
அழகு அவன்
விழிகளிலா..!
மொழிய மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!
No comments:
Post a Comment